இலங்கையைச் சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கொட, ஜூலை 3ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடலை பிரதீப் சிங் என்பவர் போல் போலியான ஆவணங்கள் தயாரித்து மதுரையில் எரித்துள்ளனர்.
இந்நிலையில், அங்கொட லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மதுரை மயானத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழும் வெளியாகியுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கை கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 5ஆம் தேதி உடற்கூறாய்வு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மயானத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் 5ஆம் தேதி என்று போடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆவணங்களில் உள்ள பெயரும் பிரதீப் சிங் என்றுதான் உள்ளன. ஆனால், அவர் உயிரிழந்த நாள் ஜூலை 3ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உள்ள தத்தனேரி மயானத்தில் பணம் செலுத்தியவர் யார் என்று அதில் உள்ள கையொப்பம் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

மேலும், அங்கொட லொக்காவின் உடலை கோவையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கை விசாரிக்க ஏழு தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்: யார் இந்த அங்கொடா லொக்கா?