கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த காந்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவர், அவ்வப்போது மீன்பிடி தொழிலும் செய்துவருகிறார். ஆரம்பகட்டத்தில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து வருகிறார். கோழிகள் வளர்த்து வந்தபோது சிட்டுக்குருவிகளை பார்த்த அவர், அதற்கு உணவும் தண்ணீரும் வைக்கத் தொடங்கினார்.
அப்போது, பயத்துடன் அங்கு சுற்றித் திரிந்த சிட்டுக்குருவிகள், தற்போது குருசாமி வீட்டின் முன்பு உள்ள சிறிய மரத்தில் அமர்ந்து உணவுகளை உட்கொண்டுவருகின்றன. அதுமட்டுமல்லாமல், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குருவிகளுக்கு சத்து மருந்துகளையும் வழங்குகிறார் குருசாமி. இதனால், எந்த நேரமும் அவரது வீட்டில் குருவிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே குருசாமி தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென குருவிகள் அதிகளவில் சத்தம் எழுப்பின. உடனடியாக எழுந்து குருசாமி வாசலை பார்த்தபோது, அவரை நோக்கி யானை ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த குருசாமி, வீட்டுக்குள் சென்று உயிர் தப்பினார். இதன் காரணமாக குருவிகளின் மீது பாசம் அதிகரிக்கவே, தன்னால் முடிந்த உதவிகளை குருவி இனத்துக்கு செய்ய வேண்டும் என, வீடு முழுவதும் கூடுகள் அமைத்து நாள்தோறும் தினை, கம்பு, ராகி, அரிசி ஆகியவை உணவாக வழங்குவதாக மெய்சிலிக்கிறார் குருசாமி.
பவானிசாகர் அணையில் மீன்பிடி தொழிலும் செய்துவருவதாகவும், வேலை நேரம் போக மற்ற நேரங்களை இந்த குருவிகளுக்கு செலவிடுவதாகவும் தெரிவித்த குருசாமி, குருவிகளுக்காகவே குடும்பத்துடன் வெளியே செல்வதில்லை என, மனம் திறக்கிறார். குருவிகளை பாதுகாக்க ஆள் தேவைப்படும் என்பதால், இரண்டு நாய்களை வளர்த்து வருவதாகவும், கழுகு, பூனை ஆகியவற்றிலிருந்து குருவிகளை காப்பாற்ற பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் குருசாமி.
குருவிகளுக்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வரும் குருசாமி, கிராமத்தில் உள்ள சிறுவர்களும் சிட்டுக் குருவிகளுக்காக பட்டாசு வெடிப்பதில்லை என இன்முகத்தோடு கூறுகிறார் அவர்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், அழிந்து வரும் உயிரினங்களை காக்க முயற்சிகள் எடுத்தால், காக்கை, குருவி, கிளி உள்ளிட்ட பறவைகளுக்கு வாழ்வாதாரம் இடைக்கும் என்பது உயிரின ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.