கோயம்புத்தூர்: அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று(ஜன.24) சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை அம்மாவட்ட ஆட்சியர் சமரன் தொடங்கிவைத்தார். இந்த மையத்தில் 100 படுக்கைகள் உள்ளன. இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரு வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. இதன்காரணமாக மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் மொத்தமாக 97.6 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஞாயிறு ஊரடங்கில் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை. கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து பேசிய கோயம்புத்தூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறுகையில், இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோருக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்படும். சித்த மருந்துகள் அளிக்கப்படும். ஆரம்பகட்ட தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டண உயர்வு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்