கோயம்புத்தூர்: வெரைட்டி ஹால், குனியமுத்தூர், செல்வபுரம் பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் திருடப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து, தனிப்படை அமைத்த காவல் துறையினர், திருடு போன இடங்களிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து திருட்டுக் கும்பலை தேடி வந்தனர்.
அதில் பெரும்பாலான இடங்களில் இரண்டு பெண்கள் மட்டுமே செல்போன்களைத் திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் கண்டுபிடித்த காவல் துறையினர், அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டு கும்பல் கைது
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, செளரியம்மாள் என்பது தெரியவந்தது. மேலும், தங்களது சகோதர்கள் ரமேஷ், அந்து ஆகியோர் மூலம் திருடப்பட்ட செல்போன்களை கள்ளச்சந்தையில் இவர்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் கோவையில் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நால்வரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காவலரை கடத்திய கும்பல் - கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு