மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.
கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 24 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை. இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை ஏந்திய பேரணி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நீதிமன்ற நுழைவாயில் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், “மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.18) ஏர் கலப்பை ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெறுகிறது.
டெல்லியில் கடும் குளிரில் போராடும் விவசாயிகளிடம் சாக்குப் போக்கு சொல்லி இன்றுவரை முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, இந்திய விவசாயிகளுக்கு தோலோடு தோல் கொடுத்து நின்றது காங்கிரஸ் கட்சி. ஆனால் அதை குழி தோண்டி புதைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக அளித்துவிட்டது. இதனை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (டிச.17) சுட்டிக்காட்டியதை போல நாட்டினுடைய பிரச்னையாக விவசாயிகள் போராட்டம் உருவெடுக்கும். நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு