கோயம்புத்தூர்: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருந்த அலங்கார ஊர்தி ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அலங்கார ஊர்திகளை மக்கள் பார்வையிடும் வகையில் தமிழ்நாடு முழுதும் அனுப்பி வைக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, அலங்கார ஊர்திகள் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தை வந்தடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் (பொ) ரா. கவிதா, சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா. ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கோ. வேடியப்பன் மற்றும் பொதுமக்கள் அலங்கார ஊர்தியை வரவேற்று பார்வையிட்டனர்.
அலங்கார ஊர்திகளை மக்கள் மேளதாளம் முழங்க கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனம் ஆடி பட்டாசு வெடித்து ஆர்வத்துடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அலங்கார ஊர்தி கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்றன.
கோயம்புத்தூர் வந்தடைந்த அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக வ.உ.சி. மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்தியை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஊர்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பார்வையிட வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பலரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு!