கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ வாக (Directory officer) பணியாற்றி வருகிறார். இவ்வேளையில் அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி கண்டுபிடித்துள்ளார். இதனால், கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள அலுவலர்களும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
சாந்தாமணிக்கு எதிராக பல்வேறு பொய்ப் புகார்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு. இது பழங்குடி இன மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்த நிலையில், பழங்குடி இன மக்கள், தாய்குல சங்கம், கேரள அ.தி.முக., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணியாக வந்து பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பழங்குடி இன மக்கள் கூறுகையில் சாந்தாணி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, பால்வள துறை சார்ந்தப் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அந்தப் பட்டப்படிப்பை முடித்த முதல் கேரள பழங்குடி இனப் பெண் சாந்தாமணிதான். பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அவருக்கு பணியும் கிடைத்தது. ஆனால், பழங்குடிப் பெண் என்பதாலேயே பணியில் சேர்ந்த பிறகும் அவருக்கு சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்: பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை
ஊழலை வெளிகொண்டு வந்ததால், அலுவலர்களும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் சாந்தாமணிக்கு எதிராக அரசியல் விளையாட்டில் இறங்கினார்கள். எங்களது பழங்குடி இன மக்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி, அதில் சாந்தாமணி குறித்து பொய்ப் புகார்களை அனுப்பினார்கள்.
சாந்தாமணிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் எட்டு மாத கைக்குழந்தையும் ஒன்று. அவரின் உடல்நிலையிலும் சிறிய சிறிய பாதிப்புகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், சாந்தாமணியை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். கூட்டுறவு சங்க ஊழல்வாதிகள், இப்போதும் அதே ஊழலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாந்தாணி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். அவரது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.