பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டுயானை மே 25ஆம் தேதி ஏழு வயது சிறுமியையும், மே 26ஆம் தேதி மாகாளி என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.
இதனையடுத்து வனத் துறை சார்பில் டாப்சிலிப் கோழிகமுத்தி வனத்துறை முகாமிலிருந்து கும்கி யானைகளான சுயம்பு, பரணி கொண்டுவரப்பட்டு நேற்று முன்தினம் (மே27) இரவு முழுவதும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்றது.
ஆனால் வனத்துறையை ஏமாற்றிய காட்டு யானை ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியது. இதனிடையே நேற்று பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் ரவிக்குமார் நவமலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் மாற்று இடங்களைப் பார்வையிட்டு, அம்மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கும்படி வனத் துறைக்கு உத்தரவிட்டுச் சென்றார்.