கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐஜி காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன்- சாரதா. இவர்களது பிள்ளைகள் ஜீவனி ஸ்ரீ (13) மகாலிங்கபுரம் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பும், ஜீவனேஸ்வரன் (9) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பும் படித்துவருகின்றனர்.
இவர்களது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ரபீக் அகமது-சபிதாபீவி தம்பதியினர். இவர்களது குழந்தை ஹசீனாபானு (13) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். அதேபோல் அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் குமார். இவரது மகன் தானு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார்.
நான்கு சிறார்களும் அருகருகே வசிப்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை (டிச. 02) இரவு 7 மணியளவில் சிறார்கள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குப் பிறகு பெற்றோர்கள் அழைத்தபோது அவர்களைக் காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் அறிவுறுத்தலின்படி ஆய்வாளர் பிரபுதாஸ், உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் காணாமல்போன சிறார்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளனர் எனத் தகவல் வந்ததன்பேரில் மகாலிங்க காவல் துறையினர் அவர்களை மீட்க விரைந்தனர். வீட்டின் முன் சிறார்கள் விளையாடிய நிலையில், அவர்கள் காணாமல்போனது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காணாமல்போன சிறுவர்கள்: ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல் துறை!