கோயம்புத்தூர்: எட்டு வயது குழந்தையை சாலையோரம் விட்டு சென்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட அவிநாசி சாலை தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நேற்று (டிச.25) மதியம் இரண்டு மணியளவில் சாலையோரம் எட்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் அவிநாசி மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் மருத்துவர்கள் மேல் சிகிக்கைகாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தண்டுகாரன்பாளையம் மக்கள் செய்யூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது நேற்று (டிச.25) இரவு சுமார் 10:30 மணியளவில் தண்டுக்காரன்பாளையம் பகுதியில் ஒரு பெண் மயக்க நிலையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் செய்யூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்து உடனடியாக அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணை அவிநாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சைலஜா குமாரி (இ.என்.டி மருத்துவர்) என்பதும், கணவர் தர்மபிரசாத்துடன் வாழ பிடிக்காமல் விவாகரத்திற்கு முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், வேலை தேடி பேருந்தில் குழந்தையுடன் திருப்பூர் வந்து கொண்டிருக்கும் போது குழந்தைக்கு பேருந்து ஒவ்வாமை காரணமாக தண்டுகாரன்பாளையத்தில் இறங்கியுள்ளார்.
பின்னர், வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பால் குழந்தைக்கு சளி மருந்தை அளவிற்கு அதிகம் கொடுத்து மயக்கமடைய செய்து சாலையோரம் விட்டு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி சைலஜாவும் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இது குறித்து செய்யூர் காவல்துறையினர் சைலஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சைலஜா அவிநாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. சைலஜாவின் குடும்பத்தாருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை மயக்க நிலையில் விட்டுச் சென்ற பெண்!