கோவை: கிட்டாம்பாளையம் ஊராட்சியில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தார் சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், 'தற்போது கிராம சபை நடைபெறும் குளத்துப்பாளையம் கிராமத்தில் 3 சுதந்திரப் போராட்ட தியாகிகள் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
தவிர, குளத்துப்பாளையம் முழுவதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. இதில் சிறப்பம்சமாக குளத்துப்பாளையம் கிராமத்தில் அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. குடிசையில் கூட தேசியக்கொடி ஏற்றி வைத்தது, மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். இதனைத்தொடர்ந்து, அவரிடம் கிராம சபையில் இலவச வீட்டுமனைப்பட்டா கோருவது உள்ளிட்ட பல மனுக்கள் கிராம மக்கள் அளித்தனர்.
இதுகுறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்குப் பின், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதுபோல், கருமத்தம்பட்டி பகுதியில் அரசு மதுபானக்கடையினைத் திறக்க எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்