கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை கூடம் அமைந்துள்ள பகுதியில் கரோனா பாதிப்பு உள்ளதால், அப்பகுதி முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இப்பகுதியை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்யாணி யானையின் தலைமை பாகன் ரவி தங்கியிருக்கும் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 12 நாள்களாக கல்யாணி யானை கோயிலுக்குள்ளே முடங்கி கிடப்பதால், யானையின் மன நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும், யானையை தனி அறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் விமலா உத்தரவின் பேரில் யானையை அருகில் உள்ள திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான தோட்டத்தில் யானையை இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் யானை தங்கியிருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, கல்யாணி யானை அருகிலுள்ள தோட்டத்திற்கு இடமாற்றப்பட்டது. பகல் முழுவதும் தோட்டத்திலும், இரவில் யானை கூடத்திலும் யானையை கட்டி வைக்க அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
தலைமை பாகன் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளதால் உதவி பாகன் ராம்ஜி யானையை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி பூமிபூஜை : நேரம் கணித்த வேத விற்பன்னர் விஜயேந்திர சர்மாவின் பிரத்யேக பேட்டி !