கரோனா வைரஸ் (தீநுண்மி) இரண்டாம் அலையால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது.
கோவையில் தீவிரம்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மருத்துவ உபகரணங்களும் அங்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து இன்று (ஜூன் 1) அதிகாலை சென்னை வந்த சரக்கு விமானத்தில் 143 கிலோ எடையில் ஆறு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சென்னை விமான நிலையம் வந்தன.
விமான நிலைய அலுவலர்கள், தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி அவசரகால அடிப்படையில் அந்த மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஆறு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் சென்னையிலிருந்து கோவைக்கு இன்று காலை சென்ற விமானத்தில் அனுப்பிவைத்தனா்.
‘கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்தில், மருத்துவ உபகரணங்களைச் சிறிதும் தாமதமின்றி, அவை செல்ல வேண்டிய இடங்களுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்கிறோம்’ என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனா்.