கோயம்புத்தூர்: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் மருந்து கடை நடத்தி வருபவர், மோகன் குமார். இவர் நேற்று முன்தினம் (ஆக. 19) இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு கிளம்பியபோது, ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மயக்கம் கொடுக்கும் போதை மாத்திரைகளைக் கேட்டுள்ளனர்.
ஆனால், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மருந்துகடை உரிமையாளர் மோகன்குமாரை தாக்கியுள்ளார். இதில், கையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்ட நிலையில், அவரை அப்படியே விட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்த ஆட்டோவில் தப்பினர்.
இந்த சம்பவத்திற்கு முன்பே மோகன்குமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியபடி இருந்தார். இணைப்பை துண்டிக்காமல் அப்படியே வைத்திருந்ததால் இந்த சம்பவம் குறித்து அறிந்த அவரின் மனைவி, உடனடியாக குடும்ப நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் மோகன்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மருந்து கடை உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில்,"போதை பொருட்கள் கிடைக்காததால் மருந்து கடைகளில் விற்கப்படும் வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் சிலர் தங்களிடம் இதுபோன்று கேட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் தங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கோவை நகரில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் போதை மாத்திரை கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர்கள் மருந்து கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென் மண்டல கவுன்சில் கூட்டம்... இம்முறை ஸ்டாலின் பங்கேற்பார்