கோயம்புத்தூர் நீலாம்பூர் பகுதியிலிருந்து அவிநாசியை அடுத்துள்ள பழங்கரை பகுதியில் கம்பி வேலி அமைக்க ஒன்பது தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் - சேலம் சாலையில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. வேனை பழனிச்சாமி (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவிநாசி அருகே வரும் பொழுது திடீரென பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய வேன் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (21) என்ற தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர், ஒரு தொழிலாளி என இருவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.