கோயம்புத்தூர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கோவை மாநகரில் பஞ்சு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் ஒருவரான யோகேஷ்குமார் (28) என்பவர் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சனிக்கிழமை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் அங்கிருந்த குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பெற்றோர், அந்த நபர் தனது குழந்தையைக் கடத்த முயற்சிப்பதாகக் கூறி சத்தம்போடவே, அங்கிருந்தவர்கள் திரண்டு யோகேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் கடத்தலுக்கான முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது.
இதனிடையே அந்த நபர் தினசரி தங்கள் வீட்டுப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சனிக்கிழமை ரேஸ்கோர்ஸில் அதே நபர் தங்கள் குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் வழங்கியதால், அவர் பின்தொடருகிறாரோ என சந்தேகமடைந்து தாக்கியதாக பெற்றோர் தெரிவித்தனர்.
முன்னதாக, இதே நபர் சிங்காநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட அதே குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு போலீசார் யோகேஷ்குமார் கடத்தல் முயற்சியில் ஈடுபடவில்லை என்று கூறி விடுவித்துள்ளனர்.
யோகேஷ்குமார் வார நாள்களில் சிங்காநல்லூர் சுற்றுப் பகுதியிலும், வார இறுதி நாள்களில் ரேஸ்கோர்ஸிலும் வியாபாரம் செய்து வருகிறார். மொழி பிரச்சனையால் தன்னைப் பற்றி விளக்க முடியாமல் அவதிப்பட்ட யோகேஷ்குமார், விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டபோதும் அந்த குழந்தைக்கு பஞ்சு மிட்டாயை கொடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்டர் மீடியனில் மோதிய கார்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி