கோவை: தேசிய பார்வையற்றோர் இணையம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையை ரூ.1000 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு இன்று (செப்.5) அளித்தனர்.
50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் தமிழக கிளையில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை எனவும்; அதனை ரூ.3000 ஆக உயர்த்தி தர வலியுறுத்தியும் பல மாதங்களாக பார்வையற்றோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இருப்பினும் பல மாதங்களாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் உடனடியாக மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி தர முதலமைச்சருக்கு ஆவணம் செய்யுமாறு இன்று (செப்.5) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளத்தனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் மனு அளித்தனர். அத்துடன் முதலமைச்சருக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் நகலையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
இது குறித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், 'இந்த ஆட்சி அமைந்த பிறகு இரண்டு நிதி அறிக்கைகளிலும் தங்களது கோரிக்கைகள் வாசிக்கவில்லை எனவும் கலைஞர் பிறந்த நாளன்று அறிவிப்பார்கள் என எண்ணிய நிலையில் அப்பொழுதும் அறிவிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
தற்பொழுது உள்ள விலைவாசியில் ஆயிரம் ரூபாய் போதாமல் இருப்பதாகவும் உடனடியாக அதனைரூ.3000 ஆக உயர்த்தி தர வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அண்ணா நூற்றாண்டு நூலகம் நாட்டின் பெருமை... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...