கோவையிலிருந்து அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா செல்லும் அனைத்து தமிழ்நாடு பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவையிலிருந்து கேரளாவிற்கு 20 தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, கேரளா செல்லும் பேருந்துகள் தடங்கள் வெறுச்சோடி காணப்பட்டன. தற்போது கேரளாவிலிருந்து வரும் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அதிலும் 27 பேருந்துகளிலிருந்து 17 பேருந்துகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் காரணமாக அதிக மக்கள் வெளியூர்களுக்குச் செல்லாததால் அதிக நெருக்கடியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!
அதுமட்டுமின்றி வாடகை வண்டி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிராவல்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினர் பாலாஜி கூறுகையில், கரோனா தாக்குதல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மாதம் வரி செலுத்தும் மாதம் என்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் கடனில் வாங்கிய வாகனங்களுக்கு கடன் செலுத்த அரசு இரு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். போர்க்கால அடிப்படையில் அரசு உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்குச் சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.