கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் எம்.எல்.எம் கம்பெனியின் நிறுவனர் மணிகண்டன் அவரது மகன் சஞ்சய் குமாரும் நிறுவன ஆள்களை கொண்டு 0.5 விழுக்காடு வட்டி தருவதாகக் கூறி சச்சின் டெண்டுல்கர், மற்றும் நடிகைகள் பலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி மக்கள் பலரும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். வாடிக்கையாளர்களுக்கு தினமும் 0.5 விழுக்காடு வட்டி தருவதாக கூறியுள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் பணம் வராததால் முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டனர். இதற்கு பதிலளிக்காமல் மெளனம் காத்த மணிகண்டனின் வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டாதல் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூரில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரும் தமிழ்நாடு முழுவதும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோரும் பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மக்களுக்கு 60 கோடி ரூபாய் தர வேண்டும் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நிதி மோசடி உள்பட 406, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், நிறுவனரின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா உள்பட சீனிவாசன், கார்த்திகேயன் ஆகிய பங்குதாரர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!