கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று (டிச.5) நடைபெற்றது. இதனை, தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் எனக் கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவையில் 71 மி.மீ மழை
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில், நேற்று (டிச.4) 45 நிமிடத்தில் 71 மி.மீ மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுத்த துரித நடவடிக்கையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து பாதிப்பு உள்ள இடங்களில் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் மழைக் காலங்களுக்கு என திட்ட வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கிய முதலமைச்சர்
மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட டெண்டர் விவரங்கள் தெளிவாக இல்லை. அதில், எனக்கு முரண்பாடுகள் உள்ளன.
கடந்த ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்ட பல பணிகள் நிதி ஆதாரம் இல்லாததால் தொடங்கப்படவில்லை. கடந்த ஆட்சியின்போது ஒப்பந்ததாரர்கள் நிதி இல்லை என்பதால் பணிகளை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
தேர்தலுக்கு முன்பு சாலைகளைப் பராமரிக்க வேண்டும் என்றிருந்த சிந்தனை, ஏன் முன்பிருந்தவர்களுக்கு வரவில்லை. தற்போதைய முதலமைச்சர் மழைநீரால் சேதமடைந்துள்ள சாலைகளை சீர்செய்ய 200 கோடி ரூபாயும், தெருவிளக்குகள் பராமரிப்பு பணிக்காக 20 கோடி ரூபாயும் அளித்துள்ளார்.
சூயஸ் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களின் அன்றாடத் தேவைகளான மின்சாரம் சாலை வசதிகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பலரும் பயனாளர் அட்டைகள் பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அதனை கலைவதற்கு வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி