கோயம்புத்தூர்: உப்பிலிபாளையம் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சிபிஎம் மோகனுக்கு ஆதரவு திரட்டி செந்தில்பாலாஜி நேற்று (பிப்ரவரி 7) பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், ஏழு நகராட்சி, 33 பேரூராட்சிகளில் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வெற்றிபெறும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6) காணொலி வாயிலாகப் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் செய்த பல்வேறு திட்டங்களை அவர் கூறியதன் மூலம், பரப்புரைக்காக எங்குச் சென்றாலும் மக்கள் தங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு என்று தெரிவிக்கின்றனர். எனவே கண்டிப்பாக திமுக வெற்றிபெறும்.
சில இடங்களில் கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறி சிலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட காணொலி பரப்புரையில் பல்வேறு மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அதற்கு முக்கியக் காரணம் திமுக பொறுப்பேற்றவுடன் முதல்கட்டமாக கரோனா நிவாரண நிதிக்கு கையெழுத்திட்டது, மகளிருக்குத் தேவையான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற பல்வேறு திட்டங்களைச் செய்ததுதான்.
தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி அளிக்கிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு வரி அளிக்கிறது என்பது குறித்து அவர்களால் (பாஜக) சொல்ல முடியாது.
கடந்த காலங்களில் பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் மருத்துவப் படிப்பு என்பதை மாற்றி எதற்காக நீட் தேர்வை கொண்டுவர வேண்டும். நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் முதலமைச்சர் சாதனைகளை வேட்பாளர்கள் மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.