கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கோவை மாவட்டத்தில் மனைப் பிரிவு, கட்டட அனுமதி தொடர்பான பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நஞ்சப்பா சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் துறையின் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார். இந்தக் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக அமைப்புப் பிரிவில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது.
பொதுமக்கள் மனு அளிக்கும்பொழுது அனைத்து ஆவணங்களையும் இணைத்து அளிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் தீர்வு காண்பதற்குத் தாமதம் ஏற்படாது. அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வுகாண வேண்டும், அலுவலர்கள் மாறியிருந்தாலும் தற்போது உள்ள புதிய அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும்.
மேலும் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் தங்களின் மனுக்களைச் சமர்ப்பிக்கும் வகையில் அலுவலர்கள் ஏற்பாடுசெய்ய வேண்டும்" எனக் கூறினார். குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா, நகர்ப்புற வளர்ச்சித் துறை இயக்குநர் சரவண வேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுரைக் குழு