கடந்த இரண்டாம் தேதி மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதற்கு பலரும் போராட்டம் நடத்தினர். முக்கியமான கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமணன் (35) என்ற பட்டியலினத்தவரை நேற்று இரவு காவல் துறையினர் கைது செய்து தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பாதிக்கப்பட்ட லட்சுமணன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரத்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய வழக்கறிஞர் ரத்தினம், பட்டியலின மக்களைக் குறிவைத்து காவல் துறையினர் தாக்குகின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட இருக்கிறது என்றார்.
அதன் பின் பேசிய பாதிக்கப்பட்ட இளைஞர் லட்சுமணன், தன்னை விட வயது குறைவான காவல் துறையினர் மரியாதை குறைவாகப் பேசி அடித்ததாக வேதனை தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்தில் வைத்து குச்சியை வைத்து தாக்கியதில் இடது கை விரலில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதனால் விரலை அசைக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். அதன்பின் தனது உடைகளை கழற்றிவிட்டு அடித்தததாகவும் காவல் துறையினர் மீது புகார் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கு. இராமகிருட்டிணன், "மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உயிரிழந்தவர்களைப் பற்றிய சோகம்கூட இன்னும் தீராத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களை அடித்து கொடுமைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. லட்சுமணனை அடித்த காவல் துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.