கோவை மாவட்டம், சோமனூர் அருகேயுள்ள கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சண்முகம். கடந்த சனிக்கிழமையன்று பணியிலிருந்தபோது இவரின் வலது கையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சோமனூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் திங்கள்கிழமை வரை மருத்துவம் பார்க்க இயலாது எனவும், சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், சண்முகம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், கரோனாவால் வேலை இல்லாத காரணத்தினால் தெடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் இன்று சோமனூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வந்த அவர், தனக்கு மருத்துவம் பார்க்குமாறு மருத்துவரிடம் கேட்க, அவரோ மருத்துவம் பார்க்க முடியாது என கூறியதோடு, சண்முகத்தை இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவர் திடீரென சோமனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலைக் கைவிட்டு, காவல் துறையினர் மூலம் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.