விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அரசைக் கண்டித்து பொள்ளாச்சி நகரக் கழகம் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கரோனா தொற்று ஏற்படுத்திவரும் துயரத்தால் கடந்த ஐந்து மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர்.
கரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020, ஜூன் 3, 2020இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்-1955இல் திருத்தம், வேளாண் விளைப்பொருள் வியாபாரம், வர்த்தகம் (ஊக்குவிப்பு, எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல், பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும்.
நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தன்னிச்சையாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் ‘பேரரசு’ மனப்பான்மை ஆகும். வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்குப் பெற்றுவரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களிலிருந்து நீக்குகிறது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும்.
மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும். “ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை” என்பதை நிலைநாட்ட வேளாண் விளைப்பொருள் வியாபாரம், வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருள்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும்.
விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைப்பொருள்களைக் கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையைத் தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப்படைக்கும் நிலைதான் உருவாகும். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைப்பொருள் சந்தைக் குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனி கட்டுப்படுத்த முடியாது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக் கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும். இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம். விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது” என்றனர்.