கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செரின் (38). கடந்த ஒரு வருடமாக கோயம்புத்துர் சரவணம்பட்டியிலுள்ள புரோஜோன் மாலில், 'வின் வெல்த் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் 'ஆன்லைன் டிரேடிங்' கம்பெனி ஒன்றை நடத்திவந்துள்ளார்.
இவர், தனது நிறுவனத்தில், ரூ.20,000 முதலீடு செய்தால் வாரம், 1600 ரூபாய் வட்டி தருவதாகவும், சிறிய தங்க நாணயம் வழங்குவதாகவும் விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி கோவை மற்றும் கேரள மக்கள் பலரும் இவரது கம்பெனியில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், சேவியர் என்பவர் ஒன்றரை லட்சம் முதலீடு செய்து 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்ப வந்ததால் செரினை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. சேவியருக்கு கம்பெனியிலிருந்தும் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. செரினும் தலைமறைவாகி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேவியர், கோவை பொருளாதார குற்றப் பிரிவில் கடந்த டிசம்பர் மாதம் செரின் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் செரினை தேடிவந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், தமிழ்நாடு கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில் இன்று (அக்.13 ) செரினைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ரூ.10 கோடி மோசடி செய்ததும், மும்பையில் தங்க வைர வியாபாரம் செய்துவருவதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செரின் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். செரினின் மனைவி ரம்யா, கம்பெனி ஊழியர்களான சைனேஷ், ராய், பைஜுமோன் ஆகிய நான்கு பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : பணம் பறிக்கும் லெட்டர் பேட் கட்சிகள் - நீதிபதிகள் கண்டனம்