கோயம்புத்தூர், சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஷோரூம்களில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு நடந்த அனைத்து இடங்களிலும் திருடன் நிர்வாணமாக சென்று பணத்தை திருடியுள்ளார்.
கரோனாவால் திருட வந்த நபர்
இது குறித்து காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்த சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் கோயம்புத்தூரிலுள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்ததும், கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக அவர் வாகனங்கள் விற்கும் ஷோரூம்களை மட்டும் குறி வைத்து திருடி வந்துள்ளார்.
சிறையில் அடைப்பு
ஒரு சில இடங்களில் திருடிய ஷோரூம் வாசலில் கற்பூரம் பற்றவைத்து நன்றி தெரிவித்து தான் சென்றதாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார். அதேபோல் திருட்டில் ஈடுபடும்போது உடை அணியாமல் இருப்பதற்கும் ஒரு காரணத்தைக் கூறி காவல் துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
திருடச் செல்லும் போது தான் அணிந்திருக்கும் உடை கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி அதன் மூலம் காவல் துறையினர் தன்னை எளிதில் பிடித்துவிடுவார்கள் என்பதால் நிர்வாணமாக சென்று திருடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆடு திருடிய இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி கைது