யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டை குறைந்திருந்தாலும், சிறிய வன விலங்குகளான மான், முயல் வேட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவ்வப்போது இந்த சட்டவிரோதமான வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் பெரியநாயக்கன்பாளையம் வெள்ளிமலை காப்புக்காடு பகுதியில் துப்பாக்கியால் வேட்டையாடப்பட்ட இரண்டு மான்களை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் செல்லும்போது வனத்துறையினர் பிடிக்க முயன்றனர்.
இதனையடுத்து மான்களின் உடல்களை வீசிவிட்டுஅவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் மதுக்கரை வனச்சரகத்தில் வனவிலங்கு வேட்டைக்குச் சென்ற ஏழு பேரில் ஒருவர் தவறுதலாக துப்பாக்கியை கையாண்டதால் அதில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வனவிலங்குகள் வேட்டை அதிகரிப்பு
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துவதால் காவல்துறையினர் வெடிமருந்து தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினர் காவல்துறைக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகள் வேட்டை அதிகரித்து வருகிறது. இதைப்போல் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியால் மேட்டுப்பாளையம் பகுதியில் யானை காட்டு யானையை விரட்ட முயன்ற போது குண்டடிபட்டு உயிரிழந்தது.
இதனையடுத்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளும் அதிக அளவில் தயாரிக்கப்படுவதால் இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வன அலுவலர் பேட்டி
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “கோவை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆண்டில் 2019ஆம் ஆண்டு 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 19 வழக்குகள் குற்றம் செய்வதற்கு முற்பட்டது சில குற்றங்கள் காட்டுப்பன்றி புள்ளிமான்கள் தொடர்புடையது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வனவிலங்கு அட்டவணையில் உள்ள விலங்குகள் வேட்டையாடப்பட்டால், இணக்கம் விதிக்கப்படுவது அல்லது கைது செய்வது தொடர்கிறது.
2020 இல் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வளவு குற்றங்கள் அதிகரிக்க காரணம் கரோனா காலத்தில் சிலர் காட்டிற்கு வெளியே இருக்கும் காட்டு முயல்களை வேட்டையாடியுள்ளனர். இதுல் 76 வழக்குகள் வேட்டையாட முயன்ற வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
7 ஆண்டு ஜெயில்- எச்சரிக்கை
வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இணக்கம் அல்லது சிறைத் தண்டனை கிடைக்கும். காட்டுப்பன்றி அதிகமாக வனப்பகுதியை விட்டு வெளியே வருவதால் வேட்டையாடப்படுகிறது. அதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் 5 சதவீத வேட்டைகளும் வனப் பகுதிக்கு வெளியே 95 சதவீத வேட்டைகளும் நடைபெற்றுள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு வனப் பணியாளர்கள் வார இறுதி நாள்களில் கடுமையான சோதனையில் ஈடுபடுகின்றனர். இதுதவிர இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
கோரிக்கை
வனம் ரெஸ்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், “வனப்பகுதியில் உள்ள கீரிப்பிள்ளை, அணில்கள் வேட்டையாடப்பட்டு அதன் முடிகள் மூலம் பெயிண்ட்டிங் பிரஸ் செய்யப்படுகிறது. மேலும் கறிக்காகவும் இந்த விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. இதனைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீரிப்பிள்ளை விவசாயிகளின் தோழன். வயல்வெளிகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள் எலிகளை கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது. தற்போது அதிக அளவில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் இதுபோன்ற விவசாயிகளுக்கு நன்மை செய்யும் விலங்குகள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் அதிக இரசாயனம் கொண்ட உரங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க : வன உயிரினங்கள் தொடர் வேட்டை: தாய், மகன் கைது!