கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் இஷானா. 18 வயதான இவர் ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்துவிட்டு பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களைக் காட்டன் துணி கொண்டு தயாரித்து வருகிறார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மறுமுறை பயன்படுத்தக்கூடிய வகையில் காட்டன் துணிகளால் ஆன நாப்கின்களைத் தயாரிக்கும் இவர், 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த தையல் பயிற்சியை அளித்து அவர்களுக்கும் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டு அந்த பயிற்சியை முடித்ததாகவும், மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தக் கூடிய நாப்கின் பிளாஸ்டிக்கில் வருவதற்கு மாற்றாகக் காட்டன் துணிகளால் ஆன நாப்கின் தயாரிக்க முடிவு செய்து இதனை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வகையிலான நாப்கின்கள் ஆறு நாட்களில் மக்கிவிடும் எனவும், தையல் கலை மூலம் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தனக்குத் தெரிந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பப் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து இந்த சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து வருவதாகவும் கூறினார். இதன் மூலம் அவர்களுக்கும் வருவாய் கிடைப்பதாகத் தெரிவித்த அவர், தற்போது கடைகளுக்கு இந்த நாப்கின்களை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள அவர், பெரு நிறுவனங்கள் நாப்கின்களை வாங்கினால் அதன் மூலம் பிளாஸ்டிக் நாப்கின்களைத் தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: உடல் பருமன் அதிகரிப்பு உள்ளூர் பிரச்னை அல்ல; உலக பிரச்னை!
மேலும் பார்க்க: கணவரின் கஷ்டத்தைப் போக்க புதுவித ஆடை!