கோயம்புத்தூர்: மாநகராட்சி 27வது வார்டு அம்மன்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொது கழிவறையில் இடைச்சுவர் இல்லாமல் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் நேற்று வைரான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் அது சிறுவர்கள் கழிப்பிடம் என விளக்கமளித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"அந்தக் கழிப்பிடம் 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருப்பாலருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாளித்த பிறகு திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் ஷர்மிளா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா முழுவதும் 240 பிராங்க் வீடியோ தொடர்பான வழக்குகள் பதிவு