கோவையில் பிரசித்திப் பெற்ற கோனியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது. இதனால் கோவை தேர்முட்டி, பிரகாசம், வெரைட்டிஹால் சாலை முழுவதும் கோலாகலமாக காணப்படும்.
வழக்கமாக இந்தத் தேரோட்டத்தின்போது காந்தி பூங்கா, உக்கடம், செல்வபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வழிநெடுக இலவச நீர்மோர் பந்தல், உணவுகள், பழங்கள் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்குவார்கள். பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படும்.
இம்முறை கரோனா தொற்று காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளனர். இலவச நீர்மோர் பந்தல் போன்றவை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைக்க வேண்டும் எனவும் முடிந்தவரை ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இயன்றவரை தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்து வர வேண்டும், நீர்மோர் பந்தல் உணவு வழங்கும் இடங்களில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை மாலை மூன்றரை மணியளவில் தேர்நிலைத் திடலில் (தேர்முட்டி) தொடங்குகின்ற தேரோட்டம் பிரகாசம் வழியாக மீண்டும் தேர்முட்டியில் முடிவடைகிறது.
200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தேரோட்ட நிகழ்வையொட்டி நாளை மதியத்திலிருந்து அப்பகுதியில் செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட உள்ளன.
இதையும் படிங்க:போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது!