கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூலை 29) தடுப்பூசி கைவசம் இல்லாததால், கோவை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக 6 மணிக்கெல்லாம் வந்தனர். தடுப்பூசி குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் 9 மணியளவில் தடுப்பூசி போடப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.
சாலை மறியல்
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்குவந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
இதனையடுத்து மறியலில் இருந்து கலைந்து சென்றவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான தகவல் தெரிவித்திருந்தால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
தடுப்பூசி போட்டால் வேலைக்குச் செல்ல முடியும்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், "எப்போதுமே முறையான தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகாலை வேலைக்குச்செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரமே தடுப்பூசி போட்டால், வேலைக்குச் செல்ல முடியும்" எனத் தெரிவித்தனர்.
இதனிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'மீண்டும் அதிகரிக்கும் கரோனா'