கோவை ரத்தனபுரி பகுதியைச் சேர்ந்தவர் மரியபிரகாசம். இவர் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். இவர்கள், தங்களின் வீட்டை வாடகைக்குவிட்டு, அதில் வரும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது வாடகை வீட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜெயா என்பவர் அவரின் தாய் சகுந்தலா மற்றும் மகள் மூவருடன் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். ஜெயாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், மூவரும் பெண்கள் என்று வீட்டை மரியபிரகாசம் வாடகைக்கு விட்டுள்ளார்.
ஜெயா வீட்டின் முன்பணம் ரூபாய் 20,000த்தில் 10,000 ஆயிரத்தை அளித்துள்ளார். இந்நிலையில் நீண்ட நாள்களாக மீதி பணம் 10,000 ரூபாயை தராமல் இருந்ததாகத் தெரிகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக இவர்களும் அவர்களிடத்தில் வீட்டு வாடகையை கேட்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மரியபிரகாசம் அவரின் மனைவியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் ஜெயாவிடம் வீட்டின் முன்பணம் மீதியை கேட்டுள்ளார்.
ஆனால் அதை தர மறுத்து வீட்டில் பல குறைகள் உள்ளது என்று கூறியே ஒரு மாத காலம் தட்டி கழித்துள்ளார். இன்று மீண்டும் மருத்துவ செலவிற்காக முன்பணத்தை கேட்க சென்ற மரிய பிரகாசத்தை, வாடகையும் தர முடியாது முன் பணத்தையும் தர முடியாது என்று கூறி அனுப்பியுள்ளார்.
இதை கேட்கச் சென்ற மரிய பிரகாசத்தின் மனைவி ஞானமேரியிடமும் தகாத வார்த்தைகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெயா வீட்டில் இருந்த பெரிய அரிவாளை எடுத்து வந்து ஞானமேரியை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மரியபிரகாசம் இரத்தினபுரி காவல் நிலையத்திற்குச் சென்று ஜெயாவிடம் இருந்து அவரது வீட்டை மீட்டுத்தரக் கோரியும் முன்பணம் மற்றும் வாடகை பெற்றுத்தரக் கோரியும் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.