ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங்(27) என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிளைவுட் கடையில் பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில், இவரது நண்பர்களான ஹரீத், மணிப்பால் சிங், சன்னி ஆகியோர் பவானி சிங்கை பார்க்க பிளைவுட் கடைக்கு சென்றனர்.
அப்போது, அவர் இரண்டு மாதங்களுக்கு முன் வேலையைவிட்டு நின்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற நண்பர்கள், பவானி சிங்கின் உடைமைகள் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை சோதனையிட்டனர். அதில், ஒரு துப்பாக்கி மற்றும் இரு தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தார். ஆனால், இதை மேலிடத்துக்கு தெரியப்படுத்தாமல் காவல் ஆய்வாளர் இருந்துள்ளார். இதனால், அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மேலும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், பவானி சிங்கையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.