கோவை: அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட, மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் மூன்றாவது அலை வருமா வராதா என்ற சந்தேகம் உள்ளது. பொதுமக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக அளவில் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களில் குறுகிய கால கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையில் விவசாய பணிகளுக்கு மானியம்
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாய பணிகளுக்கு பெட்ரோல், டீசல் மீது மானியம் வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதன் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைமையிலான மாநில அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது போல பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும். தற்போதுவரை திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மத்திய அரசை மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்துவது குறித்து கட்சி தலைவர்களிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
'கட்சியிலிருந்து விலகியவர்களால் எந்த நஷ்டமும் இல்லை'
கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். கோவையில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, அவினாசி, திருச்சி சாலைகளில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களால் கட்சி பாதிக்காது" எனத் தெரிவித்தார்.