கோவை: மருதமலை அடிவாரத்தில் மலைப் பாதையில் யானை சாணத்தில் 200 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, இதுதொடர்பாக தலைமை வனப் பாதுகாவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இடமாற்றப்படும் குப்பைக் கிடங்கு
இந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் மருதமலை மலை பாதையில் சுமார் 30க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் உதவியுடன், சாலை ஓரத்திலிருந்த சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளனர்.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டுவரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? - உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கலான புதிய மனு!