கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் உதகை சாலை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜ்குமார் (39), 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்தும், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய விளை நிலத்திலும் பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு, பசு மற்றும் எருமை மாடு என கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்.
ராஜ்குமார் விவசாய நிலத்தில், கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவர், தினசரி காலை 8 மணிக்கு, கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று, மாலை நேரத்தில் கால்நடைகளை வீட்டில் கட்டி விட்டு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கால்நடைகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் ஆசிட்டை வீசியுள்ளனர். ஆனால் இச்சம்பவம் குறித்து கூலித்தொழிலாளி, ராஜ்குமாரிடம் தெரிவிக்கவில்லை.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பசு மற்றும் எருமை மாடுகளின் உடலில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்ட ராஜ்குமார், ஆசிட் வீச்சப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறை, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மருத்துவ குழுவினர், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூரமான செயலுக்கு முன்விரோதம் காரணமா, இதன் பின்னணி என்னவென்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விதிமுறைகளை மீறி கட்டும் கட்டடங்கள் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை