கோவை: சூலூர் பகுதி கள்ளப்பாளையம் கிராமத்தில் கொடிசியா நிர்வாகம் (கோவை மாவட்ட சிறுதொழிலதிபர் சங்கம் (Coimbatore District Small Scale Industry Association - CODISSIA)) சார்பில் 140 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருகிறது. தொழிற்பூங்கா கட்டுவதற்கு அங்குள்ள நீர் நிலையை ஆக்கிரமித்தும், அந்த நீர் நிலைக்கு வரக்கூடிய நீர் வழித்தடத்தை அழித்தும், இந்த தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும் தொழிற்பூங்கா நிறுவுவதற்காக நகர ஊரமைப்பு துறை இயக்குநரிடம் உண்மை தகவல்களை மறைத்தும்,பொய்யான தகவல்களை வழங்கியும் டிடிசிபி அனுமதி பெற்றுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கோவை அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே கொடிசியா தொழிற்பூங்கா அலுவலம் முன்பு இன்று (ஜூலை28) தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச்சங்கத்தினர் அமைதியான முறையில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாரும், மாவட்ட நிர்வாகமும், கொடிசியா நிர்வாகிகளும் போராட்டத்தைக் கைவிடும்படி விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் விவசாயிகள் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு மற்றும் விவசாய நிலத்தில் மின் கம்பிகளை போடும் திட்டத்தையும் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
இதையும் படிங்க: பொது விநியோக பொருள்கள் கடத்தலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!