கோவையில் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை அருகே உள்ள ரயில் பாதையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவ.26 ஆம் தேதி மங்களூரு-சென்னை விரைவு ரயிலில் மோதிய விபத்தில் இரண்டு ஆண் யானைகளும் ஒரு பெண் யானையும் என 3 யானைகள் உயிரிழந்தன.
இந்த யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில் கோவையில் இன்று (ஏப்.10) ஆய்வு மேற்கொண்டனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகியோர் நவக்கரை அருகே யானை ரயிலில் அடிபட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இன்ஜினில் தண்டவாளத்தில் பயணித்த படி அவ்வழி முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அக்குழுவினர் கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து ரயில் நிலையத்தில் நீதிபதிகள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தொலைக்காட்சி மூலம் யானை வழிப்பாதை மற்றும் ரயில் பாதைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழக கேரள வனத்துறை அதிகாரிகள், மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வனவிலங்கு வேட்டைக்காக வைத்த அவுட்டுக்காயை கடித்ததில் 10 வயது பெண் யானைக்குட்டி உயிரிழப்பு!