பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆழியார் வனப்பகுதியில் காட்டுயானைகள் தண்ணீர் குடிக்க ஆழியார் அணை நோக்கி வருகின்றன, நவ மலைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலைகளைக் கடக்கின்றன.
இதில் ஒற்றைக் கொம்பு யானைக்கு மதம் பிடித்துள்ளதால், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து மூன்று நாள்களாக யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையில் வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வன விலங்குகளுடன் புகைப்படம், செல்பி எடுப்பது வன விலங்குகளின் அருகே செல்ல முற்படுவது ஆகிய காரியங்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வால்பாறை மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஆழியார் அணைக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன ஆதலால் வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
மேலும் நவமலையில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தருமாறு கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிக்காக 12 பேர் கொண்ட குழு அமைத்து வனத்துறையினர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: