கோவையிலிருந்து பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. சுமார் 24 கிலோ மீட்டர் வனப்பகுதியில் ரயில் பாதை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வன விலங்குகள் ரயில் பாதையைக் கடக்கும் என்பதால் ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், குறிப்பிட்ட நேரங்களைத் தவிர அனைத்து ரயில்களும் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.
கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததால் கேரள மாநிலம் கஞ்சி கோடு வரை 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு-கேரள எல்லையான சாவடிப்பாலம் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயன்ற சுமார் 10 வயதுள்ள ஆண் யானை மீது கேரளாவிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியது.
இதில் காயமடைந்த யானை கேரள வனப்பகுதிக்குள் சென்று மயங்கி விழுந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அது பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், கோவையிலிருந்து பாலக்காடு வரை உள்ள வனப்பகுதி யானைகள் காப்பகமாக உள்ளதாகவும், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 26 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ரயில்கள் கேரளாவிலிருந்து வரும் போது ரயில் ஓட்டுநர்கள் மித வேகத்தைக் கடைப்பிடிப்பதில்லை எனவும், இதனால் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.