மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலாச்சார ஆய்வு நிபுணர் குழுவை அமைக்க வலியுறுத்தி திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்தும், நிபுணர் குழுவை அமைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியும், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி, பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்க உறுப்பினர் வெண்மணி, ”இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. அதில் இந்துத்துவக் கலாச்சாரத்தைத் திணிக்கும் வகையில் கலாச்சார ஆய்வுக்குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்த ஆய்வுக் குழுவில் பழங்குடியின மக்கள், பட்டியிலனத்தைச் சேர்ந்த மக்கள் பவுத்த மதத்தினர் என்று யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே இதை உடனடியாக கலைக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை பாஜக அரசு நடைமுறைப்படுத்தும் செயலை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.