பாஜக மாநிலத் தலைவர் அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்திவருகிறார். இதற்குப் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ. 20) தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவது தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவது. கல்வி உரிமைகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது. இந்தியை தமிழ்நாட்டில் புகுத்துவது என்ற மக்கள் விரோத செயல்களை செய்வதோடு தவறான பொருளாதாரத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் இவற்றை எல்லாம் திசை திருப்புகின்ற வகையில் வேல் யாத்திரையை பாஜகவினர் நடத்திவருகிறார்கள்.
வேல் யாத்திரையை கலவர யாத்திரையாக நடத்துகின்ற முயற்சியை செய்துவருகிறார்கள். இது ஆன்மீக யாத்திரை அல்ல. அரசியல் யாத்திரை என்று கூறி இரண்டு முறை நீதிமன்றம் தடை விதித்தும் இவர்கள் அதை நடத்திவருகின்றனர்.
கரோனா காலத்தில் ஆயிரம் பேரை திரட்டி பரப்புரை நடத்திவருகிறார்கள். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்காமல் கடைசியில் கைதுசெய்யலாம் என்ற நோக்கத்தோடு மற்ற மாவட்டங்களை போல் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இரண்டு, மூன்று வழக்குகளில் இருந்தாலே குண்டர் சட்டத்தில் மற்றவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் இவர்கள் மட்டும் 10 நாள்களாக கைது செய்யப்படாமல் இருக்கின்றனர்.
எனவே இவர்கள் கோவை நகருக்குள் வருவதையே காவல் துறையினர் தடுக்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து அமைப்புகளும் இணைந்து வருகின்ற 22ஆம் தேதி கோவையில் நடைபெறும் வேல் யாத்திரை தினத்தன்றே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’வேல் யாத்திரை அல்ல; அது அரசியல் யாத்திரை’ - தமிழக அரசு