வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து மனிதர்கள் உயிரிழப்பது என்பது தினசரி செய்திகளாய் அரங்கேறி வருகிறது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி என மூவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகம் தீர்வதற்குள் அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளே இன்னொரு சோகம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சுற்று சுவர் இடிந்து அதனை ஒட்டியுள்ள நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நிவேதா, ராமநாதன் ஆகிய இருவரும் அப்பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி செல்வராஜின் குழந்தைகள் ஆவர்.
மகள் நிவேதா கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகன் ராமநாதன் 10ஆம் வகுப்பும் படித்து வந்தனர். ஏற்கெனவே செல்வராஜின் மனைவி லட்சுமி கட்டட வேலை செய்யும்போது கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் இரு குழந்தைகளையும் மனைவியின் தங்கை சிவகாமி வளர்த்து வந்துள்ளார். எண்ணற்ற கனவுகளோடு கல்வி பயின்று வந்த நிவேதாவும், ராமநாதனும் சம்பவத்தன்று தங்களது சித்தி சிவகாமியின் வீட்டில்தான் உறங்கியுள்ளனர். தொடர்மழை காரணமாக அப்பகுதியில் உள்ள டீ கடையிலேயே தங்கி விட்டதாக கூறும் செல்வராஜூக்கு காலையில் உறவினர் சொல்லிதான் சுவர் இடிந்து மகனும்,மகளும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
"மழைக்கு சுவர் இடிந்து விழுவது சாதாரணம்" என்ற அலட்சிய பேச்சும் "ஏற்கெனவே இடிபாடுகளுடன் இருந்த சுவரின் மீது கவனம் செலுத்தாத அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணம்" என்று அத்தியாவாசிய பேச்சும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த சமூகத்தில் செல்வராஜின் செயல் நம்மை அவருக்காய் இன்னும் போராட தூண்டுகிறது. ஏற்கெனவே மனைவி, இப்போது குழந்தைகள் இப்படி குடும்பத்தையே இழந்து நாதியற்று நிற்கும் செல்வராஜின் மனிதம் நிச்சயம் அலட்சியத்துடனும், ஆதிக்கத்துடனும் நடமாடும் சிவசுப்பிரமணியம் போன்றவர்களுக்கு நல்ல பாடத்தை புகட்டியது.
மருத்துவமனையில், குழந்தைகளின் கண்களை கொண்டு இருவருக்கு பார்வை அளிக்கலாம் என மருத்துவர்கள் கூற, உடனே செல்வராஜ் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தனது பிள்ளைகளின் நான்கு கண்களையும் தானமாக வழங்கினார். சோகத்தில் இருக்கும் எந்த மனிதனும் அடுத்தவர்களின் சுகத்தை பற்றி கொஞ்சம் சிந்திப்பானா என்ற கேள்விக்கு விடை தேடி கொண்டிருந்த போது செல்வராஜின் செயல் நம் சிந்தனையை அவர் பக்கம் திருப்பியது.
தீராத சோகத்திலும் தன் குழந்தைகளின் கண்களை தானம் செய்த அவரின் செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ”என் பிள்ளைகள்தான் வாழ தகுதியற்று போனார்கள். அவர்களின் கண்களாவது இன்னொருவருக்கு உதவட்டும். அவர்களின் பார்வையில் என் பிள்ளைகள் வாழட்டும்” என்ற செல்வராஜின் மனிதத்தால் குழந்தைகள் மரணிக்கவில்லை.
இதையும் படிங்க:
'சுவர் விழுந்து இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்' - முதலமைச்சர் அறிவிப்பு