கோயம்புத்தூர் : பொள்ளாச்சி அருகேயுள்ள சின்னம்பாளையம் ஊராட்சியில் 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மேலும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கறவை பசுக்கள், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்கள வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இனத்தைச் சேர்ந்த கால்நடைகள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாக கணக்கெடுக்கும் பணி, தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் எத்தனை கால்நடைகள் உள்ளன என்பது குறித்து அறிவிக்கப்படும்.
அதேபோல், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,154 கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல் காலியாக உள்ள கால்நடை உதவியாளர்கள், மருத்துவர்களுக்கு இணையான ’ஏ கிரேடு’ பணியாளர்களுக்கான இடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.