கோயம்புத்தூர்: ஐஏஎஸ் தேர்வில் 750ஆம் இடத்தைப் பிடித்த மாற்றுத் திறனாளியான ரஞ்சித்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வின் மூலமாக மட்டுமே இந்திய ஆட்சிப் பணியின் உயர் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வில் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதில், பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், அங்கிதா ஜெயின் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
வெற்றிபெற்ற 761 பேரில் 263 பேர் பொது அல்லது ஓபன் கோட்டாவில் வென்றவர்கள் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினர் (EWS) 86 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC) 229 பேரும், எஸ்சி பிரிவிலிருந்து 122 பேர், எஸ்டி பிரிவிலிருந்து 61 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற 761 பேரில், தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித் 750ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ரஞ்சித், பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளி ஆவார். அவரது தாயார் வாசிப்பதை வைத்தே அவர் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். முதன்முதலாக அவர் யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட நிலையில், அதிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாக இருப்பேன்
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வினை தமிழில் எழுதினேன். மொழி எங்கும் ஒரு தடையாக இருந்ததில்லை. தொடர்ந்து முயன்று தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
பொது மக்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மாற்று திறனாளிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்" எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவரது தாயார் அமிர்தவள்ளி கூறுகையில், "முதலில் குரூப் 1 தேர்வு எழுதிய போது, அதில் காது கேளாதோருக்கு ஒதுக்கீடு இல்லை என நினைத்திருந்தோம். அதன் பின்பு இரண்டு வருடமாக தேர்வுக்கு தயாராகி தற்போது என் மகன் வெற்றி பெற்றுள்ளார்.
கரோனா காரணமாக சென்னை தனியார் ஐ.ஏ.எஸ் அகாதமியில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால், அதில் படிக்க ரஞ்சித் மிகவும் சிரமப்பட்ட நிலையில், பி.எஸ்.ஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் பாரதி உதவினார்.
எங்கள் மகனுக்கு ஏதாவது ஒரு சிறிய அரசு பணி கிடைக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: குடிமைப் பணித்தேர்வு முடிவு 2020: முதலிடம் பெற்ற பிகாரைச் சேர்ந்த சுபாம்குமார்