கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் 6,000 கிலோமீட்டர்களுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 27 சுங்கச் சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் உள்ள கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை மட்டும் செல்ல 100 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 110 ரூபாயாகவும், இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிறியரக பேருந்துகள் ஒருமுறை மட்டும் சுங்கச்சாவடியைக் கடக்க 155 ரூபாயாக இருந்த கட்டணம் 170 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஒருமுறை மட்டும் செல்ல 315 ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் 345 ரூபாயாகவும், மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ஒருமுறை சுங்கச்சாவடியை 625 ரூபாயாக இருந்த கட்டணம் 685 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சுங்க கட்டண உயர்வால் கடும் பொருளாதார இழப்பு: அதேபோல ஒரே நாளில் திரும்பிவரும் பயணத்துக்கான சுங்க கட்டணம், கார் ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 15 ரூபாயும், இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 20 ரூபாயும், பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு 45 ரூபாயும், மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு 340 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன உரிமையாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சுங்கக் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கட்டணங்கள் உயர்ந்தாலும் ஓட்டுநர்களின் சம்பளம் உயர் வதிலை இரவு பகலாக வாகனங்களை இயக்கினாலும் போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை, டீசல் விலை உயர்வு சுங்கக் கட்டண விலை உயர்வால் லாரி வாடகையை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயரும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
மளிகைப் பொருள்களின் விலை உயரும்: டீசல் விலை உயர்வு சுங்க கட்டண உயர்வு குறித்து மொத்தமாக வியாபாரம் செய்யும் மளிகைக் கடை உரிமையாளர்கள் கூறுகையில் தங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு மளிகை பொருள்கள் வெளியூரிலிருந்து கோவைக்குக் கொண்டு வர லாரி ,மினி டெம்போவை பயன்படுத்துகிறோம்.
டீசல் விலை உயர்வு சுங்க கட்டணம் உயர்வு காரணமாக லாரி வாடகை உயர்த்துவதால் மளிகை பொருள்களின் விலையை 20 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும், டீசல் மற்றும் சுங்க கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த மாதம் தங்களுடைய வீட்டிற்கு 1500 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கி நிலையில் இந்த மாதம் அதே பொருள்களை 2500 ரூபாய்க்கு வாங்கியுள்ளோம். விலை உயர்வால் கூடுதல் செலவினம் ஆனாலும் வருமானம் என்பது மிகக் குறைந்த அளவில் உள்ளது. எனினும் இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்!