கோயம்புத்தூர்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள, பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, முழு கரும்பு, சர்க்கரை, ரூ.2500 பணம் வழங்கும் நிகழ்ச்சியை பொள்ளாச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. குடும்ப அட்டை உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரால், ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் இந்தப் பரிசுத் திட்டம் வழங்கப்பட்டுவருகிறது. கரோனா காலத்தில் மக்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த முறை ரூ. 2500 வழங்கி உள்ளார்" என்றார்
தொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள் மீது ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயராமன், "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ரத்துசெய்யப்பட்ட ஒப்பந்தங்களை எடுத்து, பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறிவருகிறார்.
இதன்மூலம் மக்களைக் குழப்பிவிட்டு, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன்பிடிக்க முயலுகிறார். அவரது முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஸ்டாலின் எப்பொழுதும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முடியாது என்று அவருடைய அண்ணன் மு.க. அழகிரியே சொல்லிவிட்டார்.
ஸ்டாலினைவிட மு.க. அழகிரி திறமையானவர்; எதையும் எடுத்துப் பேசும் திறமையுடையவர். ஸ்டாலின் பேசும் பேச்சை மறக்கும் குணமுடையவர்" என்றார்.
இதையும் படிங்க: மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்பதில்லை - கே.என். நேரு