இந்தியாவில் 1,120 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கரோனா பாதிப்பில் 96 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம், இறைச்சி கடைகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி பிரியர்கள் இறைச்சி வாங்க, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குவிந்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், மக்கள் அனைவரும் இறைச்சி வாங்க முண்டியடித்து சென்றனர்.
கோவை உக்கடம் மீன் சந்தையில் மக்களின் கூட்டம் வழக்கம் போல் இல்லாவிட்டாலும் சற்று அதிகமாகவே காணப்பட்டது. கரோனா வைரஸின் தாக்கம் குறித்து சற்றும் சிந்திக்காமல் மக்கள் இவ்வாறு செயல்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலர்களும், அரசும் அறிவுறுத்தி வந்தாலும் மக்கள் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். எனினும் கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மக்கள் இடைவெளி விட்டு நின்று மீன்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக எம்பி -கே.பி. அன்பழகன் குற்றச்சாட்டு