அந்த மனுவில், வைரஸ் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நல பணிகளை மேற்கொள்ளும்போது கோவை மாவட்ட காவல் துறையினர் இடையூறாக இருப்பதாகவும், பொய் வழக்கு போடப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு நன்மைகளை செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கேட்கும்போது அதனை தட்டிக் கழிக்கின்றனர். எனவே அவர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தடுப்பூசி போடும் மையங்கள், ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கும்போது திமுகவினர் குறுக்கீடு செய்கின்றனர். இதனை காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்குத் தனி கவனம் செலுத்தி திமுகவினர் தலையீடு செய்ய அனுமதிக்கக் கூடாது.
கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் கழிப்பறைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி அதை உறுதிசெய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளை கால தாமதமின்றி அரசு, இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிப்பதில் உள்ள குளறுபடிகளை களைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டால் படுக்கை வசதிகள் இல்லை என்று தெரிவித்து தொடர்பை துண்டிக்கின்றனர். ஆனால் செய்தித்தாள்களில் படுக்கை வசதிகள் காலியாக உள்ளது என்று வெளியிடப்படுகிறது. எனவே அதன் உண்மை தன்மையை மக்களுக்கு செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் கறுப்புப் பூஞ்சைத் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கிராமப்புறம், மலைவாழ் மக்கள் இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.